சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 23ஆம் தேதி ஆதிக்கேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றம் நடைபெற்றதுடன், ஆதிக்கேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தினமும் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், திருமுறை ஆசான்கள், சந்தான குறவர்கள், சேக்கிழார் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, சுவாமிகள் சப்பாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பின்னர் பவானி நகரின் முக்கிய வீதிகளில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் பாடியபடி சப்பாரங்களை தோள்களில் சுமந்து திருவீதி உலா வந்தனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுவந்து சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகள்:
- 29ஆம் தேதி காலை ஆதி கேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண உற்சவம்.
- தொடர்ந்து உற்சவமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலித்தல் மற்றும் தேர் இழுத்தல் நிகழ்ச்சி.
- 30ஆம் தேதி காலை சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்.
- தொடர்ந்து சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா.
- மே 3ஆம் தேதி வரை நாள்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் அருள் குமார் மேற்கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.